ஜோதிடம் அவசியமா இல்லையா?
Saturday, January 17, 2009
இன்று காலை விஜய் டிவி யில் இந்த வார "நீயா நானா" நிகழ்ச்சியின் சிறு தொகுப்பை பார்க்க நேர்ந்தேன். ஜோதிடம் அவசியமா இல்லையா என்பதை பற்றி பேசி கொண்டிருந்தார்கள். ஒருவர் கூறினார், "காலையில் வெளியே வரும்போது காகம் வலது புறத்திலிருந்து இடது புறம் பறந்தால் அன்று அவருடைய செயல்பாடுகள் எல்லாம் மிக விரைவில் நடக்குமாம்". கேட்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருந்தது. நான் யாருடைய நம்பிக்கையையும் கேலி செய்ய விரும்பவில்லை. அவர் அவர் ஒவ்வொரு நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த நம்பிக்கை எப்பொழுது குடும்பத்தில் உள்ள பிறருக்கோ, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கோ, அலுவலகத்தில் கூட பணிபுரியும் நண்பர்களுக்கோ இல்லை நாட்டுக்கோ துன்பம் தருவதாக இருந்தால் கண்டிப்பாக அதை விட கேவலமான அசிங்கத்துக்குரிய விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது! சமீப காலத்தில் என் சுற்று வட்டாரத்தில் நடந்த ஒரு சில விஷயங்கள் அதற்கு உதாரணம்.
என் நண்பனுக்கு அவன் வீட்டில் பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணுடைய புகைப்படத்தை அவனுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதை பார்த்து விட்டு அவனுககுஅந்த பெண் மிகவும் பிடித்திருந்தது. இரு குடும்பத்தினருக்கும் இந்த சம்மதத்தில் ஈடுபாடு இருந்தது. ஆனால் இறுதியில் ஏதோ ஒரு ஜோதிடர் இவர்களுக்கு திருமணம் நடந்தால் நாற்பது வயதில் இருவருக்கும் ஏதோ நோய் வருமாம், அதனால் வேண்டாம் என்று கூறி விட்டார்கள்! பாவம் என் நண்பன் மற்றும் அந்த பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து விட்டு இறுதியில் மண்ணை அள்ளி போட்டு விட்டுவிட்டார்கள்!
வேறு ஒரு நண்பரின் வாழ்க்கையில் நட்ந்தது இன்னும் வேடிக்கை. நண்பரின் தங்கை ஒருவரை காதலித்திருக்கிறார். நண்பர் வீட்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள எந்த வித தடையும் இல்லை. ஆனால் வேடிக்கை என்னவென்றால் அந்த காதலனுடைய வீட்டில் எட்டு மாதங்கள் ஆகியும் அவர்கள் சம்மதம் இன்னும் கேட்கவே இல்லை. நண்பரின் தந்தையிடம் அவர்கள் எங்கள் திருமணம் கண்டிப்பாக ஜனவரி மாதம் நடந்தே தீரும் என்று கடந்த ஆறு மாத காலமாக உறுதியுடன் கூறி கொண்டிருந்தார்கள். டிசம்பர் மாதம் ஆகியும் ஒரு வேலையும் நடந்திராத நிலைமையிலும் கண்டிப்பாக சொன்ன தேதியில் திருமணம் நடக்கும் என்று திடமாக இருந்தார்கள். நண்பர் கோபமுற்று கேட்ட பொழுது விஷயம் தெரிய வந்தது. ஏதோ ஒரு ஜோதிடர் கூறினாராம் இவர்களுக்கு ஜனவரி மாதம் கண்டிப்பாக திருமணம் நடக்கும் என்று. இது வரை நடந்த பாடு இல்லை. அவர்கள் வீட்டில் சம்மதமும் கிடைக்கவில்லை. ஜோசியர் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களுக்கு அறிவு எங்கே போயிற்று? யோசிக்கவே மாட்டார்களா?
படித்தவர்களே இப்படி இருந்தால் பாமரர்களின் நிலை என்ன? அருமை நண்பர்களே, கொஞ்சம் யோசியுங்கள்!
0 comments: to “ ஜோதிடம் அவசியமா இல்லையா? ”
Post a Comment